தேவி ஸ்ரீ சின்னமஸ்தா

 

தேவி, உன் முகம் பரவசத்துடன் உள்ளது.அதே சமயம் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ளதே..காரணம் என்னவோ? கயிலாயத்தில் ஐயன் அன்னையிடம் வினவ..

ஐயனே, அனைத்தும் அறிந்த பரம்பொருள் தாங்கள்.சகல ஜீவனிடத்திலும் வியாபித்து அனைத்து உயிர்களின் சங்கமமாக அதனை இயக்குவதும் தாங்களே.அனைத்தின் எண்ணமும் , வடிவமும், கர்மமும், இயக்கமும் தாங்களாகவே இருக்கும்பொழுது என் மனதில் எழும் சந்தேகம்மட்டும் தாங்களால் உணரப்படாதா என்ன? பரவசமுடன் பார்வதிதேவி பதிலையே வினாவாக அளிக்க புன்முறுவலுடன் அதை ஏற்ற ஐயன் தேவி அனைத்தும் நானாக இருந்தாலும் எனை இயக்கும் சக்தி நீயல்லவா ? என்றார்

இவ்வாறு அன்னையும் ஐயனும் மிகுந்த சந்தோஷத்துடன் சம்மாஷித்துக்கொண்டிருக்கும் பொழுது அன்னை தனது மனதில் தோன்றியதை கேட்டாள்

  ஸ்வாமி, முன்பொரு சமயம் நாம் சம்பாஷித்துகொண்டிருக்கும் பொழுது தேவி ஸ்ரீ சின்னமஸ்தா பற்றி கூறினீர்கள்.அவளை பற்றிய முழு வரலாறையும் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். தயை கூர்ந்து அவளை பற்றியும் அவளது பிரவேசம் பற்றியும் கூறுகிறீர்களா ? என்று மிகுந்த சந்தோஷத்துடன் வினவினாள்

அதை ஏற்ற ஐயன் தேவி ஸ்ரீ சின்னமஸ்தாவின் சரிதத்தை கேட்க ஆவளாயிருக்கும் உமையவளே, கேள். எவரொருவர் தேவி சின்னமஸ்தாவின் பெயரை உச்சரிக்கிறார்களோ அந்த கணமே அன்னையின் அருட்பார்வையை அவர்கள் பெறுகிறார்கள் என்று தேவி ஸ்ரீ சின்னமஸ்தாவின் சரிதத்தை தொடர்ந்தார்..

  பிரசண்ட சண்டிகா எனும் திவ்ய நாமம் கொண்ட ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் சரிதத்தை சொல்கிறேன் கேள்

தேவர்களின் காலமான கிருத யுகத்தில் நான் கயிலையில் வீற்றிருக்கும் பொழுது ஜகத்தை காத்தருளும் தாயும் எனது பத்னியுமாகிய மாயா தேவி அண்ட சராசரங்களையும் நோக்கினாள்.அனைத்துலகிலும் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தாயுள்ளத்தோடு, ஜீவன்கள் இன்பமுடன் இருப்பதைகண்டு பரவசமடைந்தாள்.

அந்த சந்தோஷத்தை என்னுடன் இன்பமுடன் பகிர்ந்துகொண்ட ஸர்வேஸ்வரி, தனது அதீத சந்தோஷத்தை அனுபவிப்பதற்காக வெளியில் சென்றாள். அந்த மஹாமாயா தேவியின் சந்தோஷத்தின் அளவை குறிப்பிட வார்த்தையில்லை. எங்களிருவரின் ஐக்ய பாவமான அந்த நிலை முழுவதுமாக தேவியை ஆக்ரமித்து இருந்தது.

அந்த நிலையில் தன்னுடன் விளையாடி தன்னை மகிழ்விப்பதற்காக பிரபஞ்சத்தை அருளும் சக்தி கொண்ட இரண்டு தோழிகளை தன்னுடலில் இருந்து வெளிப்படுத்தினாள்

முதலாவதாக வாருணி என்ற தோழியும் இரண்டாவதாக டாகினீ என்ற தோழியும் வெளிப்பட்டனர்.

என்று கூறிய ஐயன், வாருணி மற்றும் டாகினீ தேவியரின் ரூபத்தை கூறலானார்

ஐயன் வாருணி மற்றும் டாகினீ தேவியரின் தோற்றத்தை விவரிக்கலானார்

ஜெப புஷ்பத்தின் (செம்பருத்தி) சிவந்த மேனியை உடையவளும் விரித்த கூந்தலுடன் திகம்பரியாகவும் இடதுகையில் கபாலமும், வலது கையில் கத்தரிக்கோலும் கொண்டு நாகங்களை பூணூலாக அணிந்துகொண்டு, யாரும் நெருங்கமுடியாத அக்னி ஜ்வாலையை போன்று எலும்பு மாலையை அணிந்து கொண்டு எல்லையற்ற சக்திகளுடன் வாருணி தேவி வெளிப்பட்டாள்.

திகம்பரியாக முண்ட மாலையை அணிந்து கொண்டு, மூன்று கண்களுடன், கொடி போன்ற பெரிய நாக்குடன், விரித்த சடையும் இடது கையில் கபாலமும், வலது கையில் கத்தரிக்கோலையும் ஏந்தியபடி கோரமான பற்களுடன் சிவந்த மேனியலாக தேவியின் இடது பாகத்திலிருந்து டாகினீ தேவி வெளிப்பட்டாள்.

இவ்வாறு வெளிப்பட்ட இரண்டு தேவியரையும் அந்த ஸ்ரீ மஹாமாயா தோழிகளாக ஏற்று புஷ்பபத்ரா நதிதீரத்திற்கு நீராட சென்றாள். மிகுந்த சந்தோஷத்தில் இருந்த தேவி இரண்டு தோழியருடன் நேரம் செல்வதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருந்தாள்.

விளையாட்டின் களைப்பில் இரண்டும் தோழியரும் பசியுணர்வை கொண்டதால் அன்னையிடம் தங்களின் பசியை தெரிவித்தனர்.

ஜகத்தையே காத்தருளும் அன்னை எவரின் பசியையும் பொறுப்பாளோ ? எட்டுதிக்கும் நோக்கினாள், கண்ணிற்கு தென்பட்டவரையில் உண்பதற்கு எதுவும் இல்லாததை கண்டுகொண்டாள். உடன் ஒரு மந்தகாசபுன்னகையுடன் தன் கையில் இருந்த கத்தியைகொண்டு தன் கழுத்தை வெட்டிக்கொண்டாள். அப்பொழுது அன்னையின் வெட்டுபட்ட இடத்திலிருந்து மூன்று நரம்புகள் வழியாக ரத்தம் பீறிட்டது. இடது நாரம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை டாகினீ தேவியும், வலது நரம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை வாருணி தேவியும் மத்தியில் இருந்த நரம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை தன் இடதுகையில் ஏந்தியிருந்த தனது தலையே பருகுமாறும் செய்தாள்.

சிவபெருமான் தொடர்ந்தார் அமிர்த தரையாக வெளிப்பட்ட தேவியின் குருதியை பருகி தேவி உட்பட மூவரும் திருப்தியடந்தனர்.மீண்டும் தன் தலையை தனது கழுத்தில் சரியாக பொருத்திக்கொண்டாள். இதன்மூலம் கருணைஉள்ளம் கொண்ட ஜகன்மாதா யாரும் பசித்திருப்பதை பொறுக்கமாட்டாள் என்ற தத்துவத்தை தெரிந்துகொள்ளலாம். குருதி வெளிப்பட்டதால் சற்று மாறிய நிறத்துடன் மீண்டும் கயிலைக்கு தன் தோழியருடன் வந்து சேர்ந்த பராசக்தியிடம் மிகப்பராக்ரமுடைய சண்டிகா தேவியே, இவ்விரண்டு தோழியரும் யாரோ? , காலையிலிருந்து எங்கு சென்றாய்? பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், கந்தர்வர்கள் யாரேனும் உன்னை அபஹரித்து சென்றுவிட்டார்களா?, உன் நிறம் ஏன் மாறியிருக்கிறது ? அனைத்து விபரங்களையும் கூறுமாறு கேட்க, அன்னை பின்வருமாறு பதிலலித்தாள் ஐயனே, பிரம்மாவுக்கோ, விஷ்ணுவிற்கோ, அல்லது தேவ, கந்தர்வர்களுக்கோ என்னை அபகரிக்கும் சக்தி கிடையாது. காலையில் ஸ்னானம் செய்ய புஷ்பபத்ரா நதிக்கு சென்றுருந்தேன்.இவர்கள் இருவரும் எனது தோழிகள், என்னால் உருவாக்கபட்டவர்கள்.அவர்களின் பசியை போக்குவதற்காக எனது தலையை கொய்து எனது ரத்தத்தை கொடுத்தேன். அதனால் தான் என்நிறம் மாறியுள்ளது என்று நதிக்கரையில் நடந்தவற்றை கூறினார்.

அற்புதமான ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் சரிதத்தை மிகுந்த சந்தோஷத்துடன் கேட்ட தேவி, மேலும் கேள், எவரொருவர் சின்னமஸ்தா தேவியின் நாமத்தை ஒருமுறை சொல்கிறார்களோ அவர்களின் பாபம் அந்த நிமிடமே நசிந்து போகும்.கருணை கடல் அதே சமயம் தன் பக்தர்களுக்கு ஒரு தீங்கு என்றால் அவளின் கோபத்தை அடக்க முடியாது.கடும் அவளது சினம் தீப்பிழம்பிற்கு ஒப்பாகும். காமத்தை வென்றவள் அதனை குறிக்கும் வகையிலேயே ரதி-மன்மதனின் மீது நின்ற நிலையில் ஸ்ரீ சின்னமஸ்தாவின் தோற்றம் இருக்கும்.

தேவி ஸ்ரீ சின்னமஸ்தாவின் பன்னிரு நாமாக்களை எவரொருவர் பாராயணம் செய்து வருகிறார்களோ எதிரியில்லாத வாழ்வு அமையும் என்று ஸ்ரீ சின்னமஸ்தா தேவியின் சரிதத்தை சிவபெருமான் உமயவளிடம் கூறி முடித்தார்.

தேவி ஸ்ரீ சின்னமஸ்தாவின் பன்னிரு நாமாக்கள்:

சின்னக்ரீவா

சின்னமஸ்தா

சின்னமுண்டதரா

அக்‌ஷதா

க்‌ஷோத க்‌ஷேமகரீ

ஸ்வக்‌ஷஈ

க்‌ஷோணீசாச்சாதக்‌ஷமா

வைரோசனீ

வராரோஹா

பலிதானப்ரஹர்ஷிதா

பலிபூஜிதபாதாப்ஜா

வாஸூதேவப்ரபூஜிதா

 

ஸ்ரீ: சுபம். மங்களம்

 
T.Srinivasaraman, Sri Varahi Upasakar,
 


 

 
  All Rights reserved - 2009-2019  
  Powered By www.sriwebsolutions.com